இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பெருமையைப் பெற்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென். அவர் கண்டுபிடித்தது எக்ஸ்-கதிர்கள். மருத்துவ உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் கண்டுபிடிப்பு, உண்மையில் தற்சயலாக நடந்த ஒன்று என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
1895-ஆம் ஆண்டு ரான்ட்ஜென் ஒரு ஆய்வை மேற்கொண்டிருந்தபோது, கேத்தோட் கதிர்களை ஆராயும் கருவியில் இருந்து எதிர்பாராத வகையில் தெரியாத ஒரு கதிர் வெளியேறுவதை கவனித்தார். அந்தக் கதிர் வழக்கமான ஒளி போல அல்லாமல், பல பொருட்களை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாக இருந்தது. குறிப்பாக, மனித கையின் எலும்புகளை நேரடியாக திரையில் வெளிப்படுத்தியதும், இது மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக மாறியது.
இந்தக் கண்டுபிடிப்பு ஒரு “தற்சயல்” அதாவது accidental discovery என வரலாற்றில் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், ரான்ட்ஜென் அதைப் பார்க்கும் முன்பு அதற்கான திட்டமோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. ஆய்வுக்குள் நடந்த அந்த எதிர்ப்பாராத நிகழ்வு உலகின் முதல் மருத்துவ எக்ஸ்-கதிர் படத்தை உருவாக்க வழிவகுத்தது.
இந்தச் சாதனையை கவுரவிக்கும் விதமாக ஸ்வீடிஷ் நோபல் கமிட்டி, 1901-ஆம் ஆண்டு முதல் இயற்பியலுக்கான நோபல் பரிசை ரான்ட்ஜென்-னுக்கு வழங்கியது. இன்று எக்ஸ்-கதிர்கள் மருத்துவம் மட்டுமல்லாது, அறிவியல், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகளிலும் அத்தியாவசியமான ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு தற்சயலாக நிகழ்ந்த ஒரு கண்டுபிடிப்பே உலகையே மாற்றியமைத்து, இயற்பியலின் முதல் நோபல் பரிசை பெற்றுத் தந்தது என்பதே வரலாறு சொல்லும் உண்மை.