தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.3,000 வழங்கப்பட்டது. இதுவரை 90 சதவீதத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் இதுவரை பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளாத நிலையில், ரேஷன் கடைகளில் அந்த தொகையை வாங்கிக் கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகை முழுவதுமாக 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட்டதால், புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் தலா ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டதால், சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.22 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு சுமார் ரூ.6,453 கோடி பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் 500 ரூபாய் நோட்டுகளாகவே விநியோகிக்கப்பட்டதால், தற்போது மாநிலம் முழுவதும் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளையே வழங்குவதால், மீதிச்சில்லறை தருவதில் வணிகர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில், சாதாரண நாட்களில் ஒரு மளிகை கடையில் தினமும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வியாபாரம் நடைபெறும் என்றும், அந்த நேரங்களில் சில்லறை நோட்டுகள் கிடைப்பதில் பெரிய பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தனர்.
ஆனால், பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டதற்குப் பிறகு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் 500 ரூபாய் நோட்டுகளையே தருவதால், பலருக்கு சில்லறை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதேபோல், ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் 500 ரூபாய் நோட்டுகளை வழங்குவதால், ஓட்டுநர்கள் சில்லறை தேடி கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இந்திய அளவில் ஏற்கனவே 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், தற்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பது, இன்னும் சில நாட்களுக்கு சில்லறை தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
