குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதத்திற்கு பிரதமர் பதிலளிக்க இருந்த நேரத்தில், சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று மோடியை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகத் தனக்கு தகவல் கிடைத்ததாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் ஜனநாயக மரபுகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமர் அவைக்கு வர வேண்டாம் என்று தாமே கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, பிரதமரின் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் உரையாற்றாமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும் என கூறப்படுகிறது.
முன்னதாக, பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே ஓம் பிர்லாவின் மேற்கண்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.
