சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளால், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் உயிரிழப்புகள், விபத்துகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் இல்லாத அமைதியான நாளாக அமைந்ததாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
2026 புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல், பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண் உத்தரவுகளை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் மேம்பாலங்கள் இரவு நேரங்களில் மூடப்பட்டன. கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், காவல் உதவி மையங்கள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, 31.12.2025 அன்று சென்னை பெருநகரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், உயிரிழப்புகள் இல்லாமலும் நடைபெற்றது. காவல்துறையின் அயராத பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
