விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் சாதனையை பின்னுக்குத் தள்ளி, சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். தமிழகத்தில் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
வெளியான 24 மணி நேரங்களுக்குள் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையை ‘பராசக்தி’ படைத்துள்ளது. விறுவிறுப்பான ட்ரெய்லர் கட் மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் காரணமாக இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை வெளியானது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ஏற்பட்ட பெரும் எதிர்பார்ப்பு காரணமாக அந்த ட்ரெய்லரும் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ‘பராசக்தி’ ட்ரெய்லர் முறியடித்துள்ளது.
