டிரம்ப்புக்கு எதிராக நூதன எதிர்ப்பு! ‘இறந்ததை போல கிடக்கும்’ போராட்டத்தில் தென்கொரிய இளைஞர்கள்!

ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பான APEC மாநாடு, தென் கொரியாவின் கியோங்ஜு நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்தித்து, முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். ஆனால், மாநாட்டின் இறுதி அமர்வில் பங்கேற்காமல் அமெரிக்கா திடீரென வெளியேறியது.

இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த தென் கொரிய இளைஞர்கள், டிரம்ப் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘முதலாளித்துவம் மனிதர்களை அடிமையாக்குகிறது’, ‘பொருளாதாரப் போரை நிறுத்து’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கியோங்ஜு தெருக்களில் பேரணியாகச் சென்றனர்.

போராட்டக்காரர்கள், ‘டிரம்ப் கடுமையான வரி மற்றும் வணிகக் கட்டுப்பாடுகள் மூலம் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை திணறச் செய்கிறார்’ என குற்றம் சாட்டினர். சிலர் புல்வெளியில் படுத்து இறந்தவர்களைப் போல நடித்து, முதலாளித்துவத்தின் தீங்குகளின் தீவிரத்தை காட்டினர்.

இளைஞர் அமைப்புகள் கூறியதாவது, ‘அமெரிக்காவின் வணிக கொள்கைகள் தென் கொரிய தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பொருளாதார ஆதிக்கம் ‘புதிய வகை போராக’ மாறிவிட்டது என்றும் கூறினார்.

இதையடுத்து, மாநாட்டில் ஏற்பட்ட அரசியல் சலசலப்பும், தெருக்களில் எழுந்த இளைஞர்களின் குரலும், உலக வர்த்தக உறவுகளில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Related News

Latest News