மனிதர்கள் இதுவரை பார்த்ததே இல்லாத ஒரு புதிய வண்ணத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வண்ணத்தை இயற்கையில் நாம் காண முடியாது. இது ஒரு பச்சை மற்றும் நீல நிறம் கலந்த, மிகவும் தீவிரமான ஒரு வண்ணம். இந்த வண்ணத்திற்கு ‘ஓலோ’என்ற பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த வண்ணம், நம்மால் சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒன்று
இந்த ஆராய்ச்சி அமெரிக்காவில் உள்ள UC Berkeley மற்றும் University of Washington ஆகிய பல்கலைக்கழகங்களில் நடந்தது. இதில், ஐந்து நபர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் சரியான நிற பார்வை கொண்டவர்கள். இதில் பங்கேற்றவர்களில் மூவர், இந்த ஆராய்ச்சிக்குத் துணைபுரிந்த விஞ்ஞானிகளே. அவர்களில் ஒருவர், பேராசிரியர்.
இவர்கள் பயன்படுத்திய சாதனத்துக்கு ‘Oz’ என பெயர். இதில் கனமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள், லேசர் மற்றும் பல ஒளி மின்னியல் உபகரணங்கள் உள்ளன. இந்த சாதனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, கண்களின் ரெட்டினாவில் உள்ள குறிப்பிட்ட வகை cone cells-ஐ மட்டும் தூண்டும் வகையில் செயல்படுகிறது. நம்முடைய கண்களில் மூன்று விதமான cone cells இருக்கின்றன: S, M மற்றும் L. இவைகள் முறையே நீலம், பச்சை மற்றும் சிவப்பு ஒளியை உணர்கின்றன. இயற்கையில் M-cone மட்டும் தூண்டப்படுவது அரிது, ஏனென்றால் அது தூண்டப்படும்போது அருகிலுள்ள மற்ற cone cells-க்கும் அதே நேரத்தில் தூண்டுதல் ஏற்படுகிறது.
ஆனால் இந்த ஆராய்ச்சி சாதனத்தில், M-cone மட்டும் தூண்டப்பட்டதால், அந்த தூண்டல் மூலமாக இயற்கையில் நிகழாத ஒரு வண்ண உணர்வு மூளையில் உருவானது. இதுதான் ‘ஓலோ’. இந்த வண்ணத்தை, பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு கலர் டயலை பயன்படுத்தி மாற்றிக்கொண்டு, தாங்கள் கண்டதை மேட்ச் செய்ய முயற்சித்தார்கள். எல்லாரும் ஒரே வகையான வண்ணத்தையே தேர்வு செய்தனர். இது அந்த வண்ண உணர்வு உண்மையானது என்பதற்கான ஒரு உறுதி அளிக்கிறது.
இந்த வண்ணம், இயற்கையில் நாம் காணும் எந்தவொரு வண்ணத்தையும் விட மிகவும் தீவிரமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த கண்டுபிடிப்பு பற்றி சில விஞ்ஞானிகள் சந்தேகத்துடன் உள்ளனர். எடுத்துக்காட்டாக, லண்டனில் உள்ள City St George’s University-ல் பணி புரியும் பார்வை விஞ்ஞானி ஒருவர் கூறும் போது, “தனிப்பட்ட cone cells தூண்டப்படும் போது நம் பார்வை உணர்வில் மாறுபாடு ஏற்படலாம். அதனால் புதிய வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறுவது சரியா என்பது விவாதத்துக்குரியது.” எனினும், அவர் இந்த தொழில்நுட்பமானது ஒரு பெரும் சாதனையாக இருக்கிறது என்பதை மறுக்கவில்லை.
இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்னவெனில், இது எதிர்காலத்தில் நிறக் குறைபாடு உள்ள நபர்களுக்காக ஒரு புதிய தீர்வாக பயன்படக்கூடியதாக இருக்கலாம். நிறங்களை தெளிவாக வேறுபடுத்த முடியாதவர்களுக்கு, இத்தகைய சீரான தூண்டுதல்கள் மூலம் புதிய பார்வை அனுபவங்கள் உருவாக்க முடியும். இதன் மூலம் மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் விரைவுபெறக்கூடும்.
அறிவியல் உலகம் தொடர்ந்து புதுமைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இன்று நாம் காண முடியாத ஓலோ, நாளை நமக்கு தெரிந்த ஒரு சாதாரண வண்ணமாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதுதான் அறிவியல்.