தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முழுநேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் அடங்கும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத விளிம்பு நிலை மக்களுக்கு இந்த பொது விநியோகத் திட்டம் பெரிதும் உதவியாக உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளில் வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த நடைமுறை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்பதை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற உள்ளனர்.
தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு, மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பிரத்யேக வாகனங்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்திற்கான விநியோக தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் இந்த திட்டத்தில் முக்கிய மாற்றம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை அல்லது கருவிழி ஸ்கேன் செய்யும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டால், பயனாளிகளிடமிருந்து பதிவேட்டில் கையெழுத்து பெற்று பொருட்களை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்த தடையும் இன்றி திட்டத்தின் பயனை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
