Monday, December 22, 2025

இந்தியாவில் வெளியாகும் புதிய 350 சிசி பைக்?

ட்ரையம்ப் நிறுவனம் கடந்த வாரம் பிரிட்டனில் தனது புதிய ட்ராக்கர் 400 (Tracker 400) பைக் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. த்ரக்ஸ்டன் 400 பைக் வெளியீட்டுடன் இணைந்து இந்த ட்ராக்கர் 400 மாடலும் அறிமுகமாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் ட்ரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பிளர் 400, ஸ்பீடு T4, ஸ்கிராம்பிளர் 400 XC மற்றும் த்ரக்ஸ்டன் 400 என மொத்தம் ஐந்து 400 சிசி பைக் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் ஆறாவது மாடலாக ட்ராக்கர் பைக் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இது 400 சிசி இன்ஜினுடன் அல்லாமல் 350 சிசி இன்ஜினுடன் வெளியிடப்படலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணமாக சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்த மாற்றம் குறிப்பிடப்படுகிறது. 350 சிசிக்கு மேற்பட்ட இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 350 சிசி மற்றும் அதற்கு குறைவான இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ட்ரையம்ப் தற்போது பயன்பாட்டில் உள்ள 400 சிசி இன்ஜினின் சிறிய வடிவமான 350 சிசி இன்ஜினை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த புதிய 350 சிசி இன்ஜினுடன் கூடிய ட்ராக்கர் பைக்கை இந்திய சந்தையில் ட்ரையம்ப் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ராக்கர் 400-ஐ விட இந்த ட்ராக்கர் 350 சற்று குறைவான பவரை உற்பத்தி செய்யும் என்றாலும், பெர்ஃபாமன்ஸில் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது என கூறப்படுகிறது.

தற்போது அறிமுகமாகியுள்ள ட்ராக்கர் 400 பைக்கில் 398 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 42 hp பவரையும் 37.5 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பிளர் 400 பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பாகங்கள் ட்ராக்கர் 400-யிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related News

Latest News