அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்! 8வது சம்பள கமிஷன் லேட்டஸ்ட் அப்டேட்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான NC-JCM, தற்போது ஒரு விரிவான கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளது. இதில் குறிப்பாக, ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபேக்டரை 3.833 ஆக உயர்த்த வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் தற்போதுள்ள 18,000 ரூபாயிலிருந்து, நேரடியாக 69,000 ரூபாயாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அடிமட்ட நிலையில் உள்ள ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிதியாதாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் மாற்றம் கோரப்பட்டுள்ளது. கடந்த ஏழாவது ஊதியக் குழுவில் இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரையின்படி, பல்வேறு ஊதிய நிலைகளில் (Levels) மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும்.

உதாரணமாக, லெவல் 1 ஊழியர்களுக்கு 69,000 ரூபாயும், லெவல் 2 மற்றும் 3-ஐ ஒன்றிணைப்பதன் மூலம் சுமார் 83,200 ரூபாயும் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்படலாம். அதேபோல், லெவல் 6-ல் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு மேலேயும், உயர்மட்ட பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு மேலேயும் அடிப்படை ஊதியம் உயர வாய்ப்புள்ளது.

சம்பள உயர்வு மட்டுமல்லாது, ஆண்டு ஊதிய உயர்வு எனப்படும் இன்கிரிமென்ட் விகிதத்தையும் 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, பதவி உயர்வு கிடைக்கும் நேரங்களில் வழங்கப்படும் கூடுதல் ஊதிய உயர்வை குறைந்தபட்சம் 10,000 ரூபாயாக உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒரு மாத கால முழு ஊதியத்தைப் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்றும் புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய மாற்றங்கள் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஓய்வூதியதாரர்களின் பென்ஷன் தொகையிலும் மிகப்பெரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது எட்டாவது ஊதியக் குழு இது தொடர்பான பல்வேறு தரப்பு ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டது. இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது, சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பலன் பெறுவார்கள். அரசு இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து வரும் நிலையில், ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related News

Latest News