மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய அமெரிக்கா – ஈரான் போர், இப்போது ஒரு மிக முக்கியமான மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானை ராணுவ ரீதியாகத் தாக்குவதை விட, அதன் பொருளாதாரத்தை அடியோடு சிதைப்பதன் மூலம் அந்த நாட்டைப் பணிய வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிரம்மாண்டமான மாஸ்டர் பிளான் போட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மையப்புள்ளியாக இருப்பது ஈரானின் ‘கார்க்’ (Kharg) தீவு. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த ஒரே ஒரு பவளப்பாறை தீவுதான் கவனித்து வருகிறது. நாளொன்றுக்கு பல மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைச் சர்வதேசச் சந்தைக்கு அனுப்பும் இந்தத் தீவைச் சுற்றி, அமெரிக்கக் கடற்படை இப்போது ஒரு பலமான இரும்புத் திரையை அமைத்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தீவிரமான கடல்வழி முற்றுகையால், ஈரானில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை வெளியேற்ற முடியாமல், கார்க் தீவில் உள்ள ராட்சதச் சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் இன்னும் சில நாட்களில் முழுமையாக நிரம்பப் போகின்றன. சேமிக்க இடமில்லாத சூழல் உருவானால், ஈரானின் மிகவும் நுணுக்கமான மற்றும் பலவீனமான ஆயில் கிணறுகளை (Oil Wells) ஈரான் கட்டாயமாக மூட வேண்டியிருக்கும்.
ஒருமுறை ஆயில் கிணறுகளை மூடிவிட்டால், அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய சவால் என்பதோடு, அது அந்த நாட்டின் வருமானத்தை மொத்தமாகத் துடைத்தெறியும். இதனை அமெரிக்க நிதித்துறை ‘எகனாமிக் பியூரி’ (Economic Fury) அல்லது ‘பொருளாதாரச் சீற்றம்’ என்று வர்ணிக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இன்றுடன் முடிவடையவிருந்த தற்காலிகப் போர்நிறுத்தத்தைப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்கக் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் ஒளிந்துள்ளது. போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், ஈரானியத் துறைமுகங்கள் மீதான ராணுவ முற்றுகை ஒரு இன்ச் கூடத் தளர்த்தப்படாது என்று ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதாவது, ஈரானுக்குத் தாக்குதலில் இருந்து தற்காலிக ஓய்வு கொடுத்தாலும், அதன் கழுத்தைச் சுற்றியிருக்கும் பொருளாதாரக் கயிறை அமெரிக்கா மெல்ல மெல்ல இறுக்கிக் கொண்டே இருக்கிறது.
ஈரானோ அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் ‘கடல்வழி கொள்ளைச் செயல்’ என்று சாடி வருகிறது. பதிலடியாக, உலக நாடுகளின் எரிசக்தி உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினாலும், மறுபுறம் நடுக்கடலில் துப்பாக்கிச் சூடுகளும், முற்றுகைகளும் நீடிப்பது உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் ஆயில் கிணறுகள் மூடப்பட்டால், அது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ட்ரம்ப்பின் இந்த ராஜதந்திர ஆட்டம் ஈரானை அடிபணிய வைக்குமா அல்லது மத்திய கிழக்கில் ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துமா என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும்.
