சேலம் மாவட்டம், காரிப்பட்டி அடுத்துள்ள குள்ளம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்கள், தங்களது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் வளர்ப்பு நாயை சங்கிலியால் கட்டி வைத்திருந்தார்
அப்பொழுது, பக்கத்து வீட்டை சேர்ந்த நந்தகுமார் நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டார். இதில் நாய் இறந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்து அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இரு வாரங்களுக்கு முன்பு நந்தகுமார் வளர்த்து வந்த கோழியை மகேஸ்வரி வளர்க்கும் நாய் கடித்துள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உயிரிழந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடாக மகேஸ்வரி பணம் கொடுத்துள்ளார்.
இருப்பினும், சட்டவிரோதமாக வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் நந்தகுமார், மகேஸ்வரியின் நாயை சுட்டுக்கொன்றது விசாரணையில் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
