குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் நிதின் ஆதியா (57) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் ஜன்னல் அருகே படுத்திருந்த நிலையில் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தூக்கத்தில் 10-வது மாடியில் இருந்து கீழே உருண்டு விழுந்துள்ளார். கீழே விழும் போது, 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் அவர் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு உதவியுடன் நிதின் ஆதியாவை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1
10-வது மாடியில் இருந்து விழுந்தபோதும், ஜன்னல் கம்பிகளில் சிக்கி அதிசயமாக உயிர்தப்பிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
