ஒரு நாளைக்கு ரூ.4,000 கோடி இழப்பு! ஈரானை நிலைகுலையச் செய்த டிரம்ப்?

நாளை நள்ளிரவுடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு சமூக வலைதளப் பதிவு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தப் போரில் அமெரிக்காதான் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதாகக் கூறியுள்ள டிரம்ப், தனது நாட்டின் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில அதிரடிப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகையால் ஈரானுக்கு நாளொன்றுக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 4,175 கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இழப்பை ஈரானால் நீண்ட காலத்திற்குத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதே டிரம்பின் தற்போதைய வாதமாக உள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் நிலைகுலைந்து விட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்களின் விமானப்படை மற்றும் ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகள் இப்போது செயலிழந்து கிடக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் பலரும் நீக்கப்பட்டுவிட்டனர் அல்லது தலைமறைவாகிவிட்டனர் என்றும், இது ஒரு வகையான ‘ஆட்சி மாற்றம்’ (Regime Change) என்றும் அவர் வர்ணித்துள்ளார். நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற அமெரிக்க ஊடகங்கள் அமெரிக்கா தோற்பது போன்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்குவதாகவும், ஆனால் கள நிலவரம் தங்களுக்குச் சாதகமாகவே இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

மிக முக்கியமாக, ஒரு முறையான மற்றும் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ஈரானியத் துறைமுகங்கள் மீதான இந்த ராணுவ முற்றுகையைத் தான் நீக்கப்போவதில்லை என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். நாளொன்றுக்கு 4,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்து வரும் ஈரான், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பணிந்து வருவதற்கு இதுவே சரியான தருணம் என்று அவர் கருதுகிறார்.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக் குழு பாகிஸ்தான் செல்லத் தயாராக இருக்கும் அதே வேளையில், டிரம்பின் இந்த ஆக்ரோஷமான பதிவு ஈரானைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை நள்ளிரவு காலக்கெடு முடியவுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமா அல்லது அமைதி நிலவுமா என்பதுதான் இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வி.

Related News

Latest News