இங்கிலாந்தின் வரலாற்றை மாற்றி எழுதிய பெண்கள்

308
Advertisement

அறிவியல், நாகரீகம் மற்றும் கலாச்சார வளர்ச்சியில் ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னோடியாக திகழும் நாடு இங்கிலாந்து.

இன்றைக்கும், ஒரு புறம் மகாராணி ‌ஒரு புறம் பிரதமர் என இயங்கும் இங்கிலாந்து கடந்து வந்த அரசியல் பாதை சவால்களும் சுவாரஸ்யமான திருப்பங்களும் நிறைந்தது.

16ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இங்கிலாந்தின் ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தியது வரலாறு. இங்கிலாந்தின் மூன்றாவது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றுள்ள இச்சூழலில் இங்கிலாந்து அரசியலின் போக்கை மாற்றி எழுதி தாக்கத்தை ஏற்படுத்திய சில பெண்களை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

1509 முதல் 1547ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அரசராக இருந்த எட்டாம் ஹென்றிக்கு ஆறு மனைவிகள்‌. ஒவ்வொரு மனைவி மாறும் போதும் இங்கிலாந்தில் முக்கிய அரசியல் மாற்றங்கள் அரங்கேறியது. ஸ்பெயினை சேர்ந்த Catherine முதல் மனைவியாக இருந்த போதே அவரின் பணிப்பெண்ணான Anne மீது காதல் வயப்பட்ட ஹென்றி Anneஐ தன்வசப்படுத்த நினைத்தார். ஆனால், திருமணம் செய்து கொண்டாலொழிய ஹென்றி யின் விருப்பத்துக்கு அடிபணிய மாட்டேன் என Anne உறுதியாக கூறியதால் கேத்ரீனை விவாகரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஹென்றி.

அப்போதைக்கு அரசருக்கும் தலைமையாக செயல்பட்ட போப், விவாகரத்து வழங்க மறுத்து விடவே ரோம உறவை முறித்துக் கொண்ட ஹென்றி 1534ஆம் ஆண்டு Act Of Supremacy சட்டத்தை இயற்றி பலம் வாய்ந்த அரசரானார்‌.

ரோம கட்டுபாட்டில் இருந்து விடுபட்டு, இங்கிலாந்து ப்ராடெஸ்டென்ட் (Protestant) தேசமாக மாறியதற்கு ஹென்றிக்கும் கேத்ரீனுக்கும் நடந்த விவாகரத்தும் Anne Boleyn உடன் நடந்த திருமணமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

1533ஆம் ஆண்டு ஹென்றிக்கும் Anneக்கும் பிறந்தார் முதலாம் எலிசபெத். ஆண் குழந்தை பிறக்காததால் ஏற்பட்ட அதிருப்தியால், காதல் மனைவியை பொய் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கி மரண தண்டனை விதித்தார் ஹென்றி.

அதற்கு பின் நடந்த மூன்று திருமணங்களும் தோல்வியில் முடிய கடைசியாக கேத்ரீன் பார் (Catherine Parr) என்ற பெண்ணை மணந்தார் ஹென்றி. இங்கிலாந்தில் புத்தகங்கள் எழுதி வெளியிட்ட முதல் அரசி என்ற பெருமையை பெற்றவர் கேத்தரின் பார்.

ஹென்றியின் இறப்பிற்குப் பின் அடுத்தடுத்து அரியணைக்கு வந்த எட்வார்ட் மற்றும் மேரியும் குறுகிய கால இடைவெளியில் இறந்து விட, 1558ஆம் ஆண்டு முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியானார்.

ஆண் வாரிசு வேண்டும் என அல்லாடிய ஹென்றிக்கு, அவர் வேண்டாம் என ஒதுக்கிய எலிசபெத் தான் இங்கிலாந்தை 45 ஆண்டுகள் ஆட்சி செய்ய போகிறார் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐந்து மொழிகளில் புலமை பெற்றிருந்த முதலாம் எலிசபெத் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இங்கிலாந்தை அலைக்கழித்து கொண்டிருந்த மத வேறுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டை வளர்ச்சி‌ பாதையில் நடத்தி சென்ற முதலாம் எலிசபெத்தின் ஆட்சி இன்றளவும் இங்கிலாந்தின் பொற்காலமாக கருதப்படுகிறது.

1837ஆம் ஆண்டில் இருந்து 1901ஆம் ஆண்டு வரைக்கும், 63 ஆண்டுகள் விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சி காலத்தில் தான் இங்கிலாந்து அசாத்திய தொழில் வளர்ச்சியை எட்டியது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் காலனித்துவ விரிவாக்கம் என உலகளாவிய சக்தியாக இங்கிலாந்து உருவெடுத்ததற்கு முக்கிய காரணம் விக்டோரியா.

அரசர் அரசிகளின் நேரடி ஆட்சி கட்டுப்பாடு குறைந்து பாராளுமன்ற அதிகாரம் அதிகரித்த பின், 1919ஆம் ஆண்டு Nancy Astor முதல் பெண் எம்பியாக பதவியேற்றார்.

அதை தொடர்ந்து, 1968ஆம் ஆண்டு Barbara Castle நாட்டின் முதல் பெண் செயலாளர் ஆனார்.

1979ஆம் ஆண்டு Margaret Thatcher இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று சரித்திரத்தில் இடம் பிடித்தார்.

1997ஆம் ஆண்டில் இருந்து எம்பியாக இருக்கும் Theresa May, 2016ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார்.

தற்போதும் ரிஷி சுனக்குடன் கடும் போட்டி நிலவிய நிலையிலும், மக்களின் ஆதரவுடன் லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசிகளாவும், அமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் பல தனித்துவமான பெண்கள் தடம் பதித்த இங்கிலாந்து அரசியலில், தொடர்ந்து ஆளுமை மிக்க பெண்கள் இடம் பெறுவார்கள் என்பதில்  சந்தேகமில்லை.