வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவர், அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் விடுமுறைக்காக காட்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். அந்த நேரத்தில், அவருடைய வாட்ஸ் அப் எண்ணுக்கு முகம் தெரியாத ஒரு மர்மநபர், “PZENA App-ல் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்” என்று செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியை நம்பிய பொறியாளர், அந்த நபர் அனுப்பிய லிங்க் மூலம் PZENA என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதில் முதலீடு செய்ய தொடங்கினார். ஆரம்பத்தில், முதலீட்டுக்கு லாபம் கிடைத்தது போல ரூ.10,000 தொகையை மர்மநபர் அனுப்பியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த பொறியாளர், மேலும் டிரேடிங் செய்வதற்காக கூடுதல் பணத்தை செலுத்தினார்.
தொடர்ந்து, அதிக லாபம் கணக்கில் இருப்பதாக மெசேஜ்கள் வந்ததால், பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.3.24 கோடியை முதலீடாக செலுத்தியுள்ளார். பின்னர், அந்த பணத்தை திரும்ப பெற முயன்றபோது, மேலும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த ஆப்பிலிருந்து மீண்டும் மீண்டும் தகவல்கள் வந்துள்ளன.
அதன்பிறகே, இது ஒரு மோசடி ஆப் என்பதும், தன்னை ஏமாற்றியுள்ளனர் என்பதும் பொறியாளருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
