ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ் !

இந்தியக் குடிமக்களின் மிக முக்கியமான அடையாள அட்டையான ஆதார் கார்டு குறித்த சில அதிரடி மாற்றங்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு விதிகளில் திருத்தம் செய்து, இந்திய தனிமனித அடையாள ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ (UIDAI), ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை இன்னும் எளிமையாகவும், அதே சமயம் பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது. ஆதார் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி ஆவணங்களைத் தவிர்க்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதால், பொதுமக்கள் இதனைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இதில் மிக முக்கியமாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு குழந்தைக்கு ஆதார் பெற வேண்டுமென்றால், குடும்பத் தலைவர் அடிப்படையிலான முறை அதாவது ‘Head of Family’ முறை மட்டுமே அனுமதிக்கப்படும். இதன்படி, பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கண்டிப்பாகச் செல்லுபடியாகும் ஆதார் அட்டையை வைத்திருக்க வேண்டும். பதிவு செய்யும் போது தாய் அல்லது தந்தையின் பயோமெட்ரிக்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, குழந்தையின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தப் பிறப்புச் சான்றிதழே முதன்மை ஆவணமாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆதார் பெற அல்லது திருத்தங்கள் செய்ய வழங்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலை அரசு விரிவுபடுத்தியுள்ளது. இனி கடவுச்சீட்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மட்டுமின்றி, வங்கிப் பாஸ்புக்குகள், மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டண ரசீதுகள், எரிவாயு இணைப்பு ரசீதுகள், இன்சூரன்ஸ் ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் கூட முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம். குறிப்பாகத் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்கள் வழங்கும் சான்றிதழ்கள் இனி ஆதாராக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

சரியான முகவரிச் சான்று இல்லாத கிராமப்புற மக்களுக்குப் புதிய விதிகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இனி உங்கள் பகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் வழங்கும் சான்றிதழ்களை வைத்தே நீங்கள் முகவரி மாற்றத்தைச் செய்து கொள்ள முடியும். அதே சமயம், வெளிநாட்டு இந்தியக் குடிமக்கள் மற்றும் நேபாளம், பூட்டான் குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் இனி பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசா வைத்திருப்பவர்களுக்கு, அந்த விசாவின் காலம் முடியும் வரை மட்டுமே ஆதார் செல்லுபடியாகும்.

போலி ஆவணங்கள் மூலம் நடக்கும் அடையாளத் திருட்டுகளை முற்றிலுமாகத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காலாவதியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அவை உடனடியாக நிராகரிக்கப்படும் என்பதோடு, போலி ஆவணங்கள் தருபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இந்த நவீன மாற்றங்கள் மூலம் ஆதார் சேவைகள் இன்னும் வெளிப்படையாகவும், சாமானிய மக்களுக்குச் சிறந்த முறையில் கிடைக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News