சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (23). நேற்று காலை, இவரது ஆட்டோவில் மதன் என்பவர், அயப்பாக்கத்திலிருந்து மதுரவாயல் சவாரியாக செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து மதனை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மதுரவாயல், கிருஷ்ணா நகர் 8வது தெருவிற்கு நந்தகுமார் இறக்கிவிட்டார்.
அப்போது மதன், அருகில் வசிக்கும் தனது மச்சானிடம் பணம் வாங்கி தருகிறேன் வாருங்கள் என அழைத்துச் சென்று நந்தகுமாரை கத்தியைக் காட்டி மிரட்டி ஆட்டோ சாவியை பிடுங்கிக் கொண்டு, ஆட்டோவை திருடிக்கொண்டு சென்றார்.
மதன் மீது நடவடிக்கை எடுத்து தனது ஆட்டோவை மீட்டு தரும்படி நந்தகுமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆட்டோவை திருடிச் சென்ற நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மதன் (எ) மதன்ராஜை (24) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
