கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து, மதுரை மாவட்டம், சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் கார் ஒன்றை முந்திச் செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, காரின் மீது பலமாக மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் எலக்ட்ரிக் காரும், அரசு பேருந்தும் முழுமையாக சேதமடைந்தன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பேருந்தில் பயணம் செய்தவர்களில் காயமடைந்த 12 பேரை மீட்ட மருத்துவக் குழுவினர், அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக சமயநல்லூர் மேம்பால பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
