சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, பல்வேறு சோதனைகளை தாங்கி அதிமுகவை ஜெயலலிதா காத்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் கிடையாது. நாட்டு மக்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதனால்தான், இன்றைக்கு அதிமுகவை யாராலும் தொட்டு பார்க்க முடியவில்லை.
இன்று பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்கு 41.33 சதவீதம் ஆகும். 84 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியுள்ளோம். 15 சட்டசபை தொகுதிகளில் 1 சதவீதம் அளவுக்குத்தான் வாக்கு குறைந்தது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.
பெண்களுக்கு ரூ.1000 கொடுப்போம் என்று அறிவித்தார்கள். சட்டசபையில் அதிமுக வலியுறுத்திய பிறகு வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து கொடுத்தனர்.
2026-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும். அதிமுக சொந்த பலம் உள்ள கட்சி. திமுக பலம் இழந்த கட்சி. அதனால்தான் கூட்டணியை நம்பி நிற்கிறார்கள்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார்.
