இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிரியாரிட்டி போஸ்ட்பெய்ட்’ (Priority Postpaid) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை, இந்தியாவிலேயே முதன்முறையாக அதிநவீன ‘5ஜி நெட்வொர்க் ஸ்லைசிங்’ (5G Network Slicing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக நெரிசல் மிகுந்த இடங்களிலும், மற்றவர்களுக்கு இணைய வேகம் குறையும் போது ஏர்டெல் பிரியாரிட்டி வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் ஸ்திரமான இன்டர்நெட் இணைப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும். எளிமையாகச் சொல்லப்போனால், சாலையில் வாகன நெரிசல் இருக்கும்போது ஒரு விஐபி வாகனம் செல்ல எப்படித் தனிப்பாதை அமைக்கப்படுகிறதோ, அதேபோலத் டேட்டா டிராபிக் அதிகமாக இருக்கும் போது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பாதை அல்லது ‘பாஸ்ட்லேன்’ (Fastlane) வசதியை ஏர்டெல் வழங்குகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருந்த இந்தத் தொழில்நுட்பத்தை இப்போது ஏர்டெல் இந்தியாவிற்குத் தந்துள்ளது. இது வெறும் இணைய வேகத்தை மட்டும் அதிகரிப்பதற்கானது அல்ல, மாறாக மிகவும் நம்பகமான மற்றும் இடர் இல்லாத இணைப்பைத் தருவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய திட்டங்கள் தனிநபர்களுக்காக 449 ரூபாய் பிளானில் இருந்து தொடங்குகிறது. இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன. குடும்பங்களுக்கான பேமிலி பிளான்கள் 699 ரூபாயில் தொடங்கி 1,749 ரூபாய் வரை நீள்கிறது. இந்த உயர்தர பிளான்களில் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் மியூசிக் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற உலகின் முன்னணி ஓடிடி தளங்களின் சந்தாக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஏற்கனவே போஸ்ட்பெய்ட் பயனர்களாக இருப்பவர்களுக்கு இந்த வசதி தானாகவே ஆக்டிவேட் செய்யப்படும் என்பது கூடுதல் செய்தி. புதிய திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அழைப்புகளுடன் மாதம் 3,000 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க ‘ஸ்பேம் அலெர்ட்’ மற்றும் மோசடி கண்டறியும் சேவைகளும் இந்த பிளான்களில் இணைக்கப்பட்டுள்ளன.
பிரீபெய்ட் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோர் மூலமாகவோ மிக எளிதாக இந்த பிரியாரிட்டி போஸ்ட்பெய்ட் சேவைக்குத் தங்களை மாற்றிக்கொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியாகத் தனது நெட்வொர்க்கை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள ஏர்டெல்லின் இந்த அதிரடி நகர்வு, மற்ற நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
