வரலாற்றிலேயே முதல்முறை! தங்கம் விலையில் மெகா ட்விஸ்ட்! 3 மாதங்களாக தங்கம் வாங்காத RBI!

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ரிசர்வ் வங்கி, தனது தங்கக் கையிருப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய அறிக்கை நிதி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு எவ்வித மாற்றமும் இன்றி 880.34 டன்னாகவே நீடிக்கிறது. வியப்பான விஷயம் என்னவென்றால், தொடர்ந்து மூன்றாவது மாதமாக ரிசர்வ் வங்கி புதிய தங்கம் எதையும் கொள்முதல் செய்யவில்லை. இந்த 2026-ம் ஆண்டில் இதுவரை வெறும் 160 கிலோ தங்கம் மட்டுமே கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் என்னவென்றால், பிப்ரவரி மாதத்தில் 131 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் தங்க இருப்பின் மதிப்பு, மார்ச் மாதத்தில் 113 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிக மோசமான மதிப்பிழப்பாகப் பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் அசுர வளர்ச்சிதான் இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், உலக நிதிச் சந்தைகளில் ஒருவித நிலையற்ற தன்மை நிலவுகிறது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், சர்வதேசச் சந்தையில் புதிய உச்சங்களைத் தொட்டாலும், டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால் தங்கத்தின் நிகர மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கம் 16.5 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது. உலக அளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது 9-வது இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுச் சந்தையைப் பொறுத்தவரை, தங்கத்தின் விலை சாமானிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. மும்பை சந்தையில் கடந்த ஆண்டு 10 கிராம் தங்கம் சுமார் 85,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,700 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாலும், போர்ச் சூழல் நீடிப்பதாலும் வரும் காலங்களில் தங்கத்தின் விலையில் இன்னும் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News