Wednesday, December 24, 2025

சாப்ட்வேர் என்ஜினீயரை ஏமாற்றி ரூ.14 கோடியை சுருட்டிய பெண் சாமியார்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் தீபக் தோலாஸ். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் நாசிக்கை சேர்ந்த வேதிகா என்ற பெண் சாமியாரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தன்னிடம் உள்ள தெய்வீக சக்தியால் உங்களது மகள்கள் 2 பேரையும் குணப்படுத்தி விடுவதாக கூறினார்.

அதன்படி சிறப்பு பூஜை நடத்தி என்ஜினீயரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.14 கோடி அளவில் கறந்தார். இவ்வளவு பெரிய தொகையை அவர், தான் இங்கிலாந்தில் வேலை பார்த்தபோது, அங்கு வாங்கிய வீடு மற்றும் சொந்த கிராமத்தில் உள்ள நிலம் ஆகியவற்றை விற்று கொடுத்துள்ளார். அந்த சொத்துகளை விற்க பெண் சாமியார் வேதிகா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெண் சாமியாரின் பேச்சை கேட்டு ரூ.14 கோடி செலவு செய்துள்ளார். இருப்பினும் அவரது மகள்களின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இது பற்றி பெண் சாமியாரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்தார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை என்ஜினீயர் உணர்ந்தார். இது பற்றி அவர் புனே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண் சாமியார் வேதிகா மற்றும் அவரது கூட்டாளிகள் தீபக் கட்கே, குணால் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News