Monday, January 19, 2026

பத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்., இனி எங்கிருந்தாலும் பத்திரப் பதிவு செய்யலாம்

பொதுமக்கள் வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கும் போது, அவற்றை பத்திரப் பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது கட்டாயமாக இருந்து வந்தது. இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வந்தது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைன் முறையில் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவை மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பத்திரப் பதிவு இணையதளத்தில் ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, சோதனை முயற்சிகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளதால், விரைவில் இந்த புதிய வசதி பொதுமக்களுக்கு முழுமையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த மென்பொருள் மூலம், சொத்துகளை வாங்கும் பொதுமக்கள் எங்கிருந்தும் பத்திரப் பதிவு செய்யும் வகையில் 18 புதிய சேவைகள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் பத்திரப் பதிவில் டிஜிட்டல் கையொப்பம் பயன்படுத்தப்படும் நிலையில், பத்திரங்களும் டிஜிட்டல் வடிவிலேயே உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.

ஆன்லைன் பத்திரப் பதிவு முறை அமலுக்கு வருவதால், காகிதம் இல்லா அலுவலகம் என்ற இலக்கு எட்டப்படும். மேலும், கியூ.ஆர். கோடு மூலம் கட்டணங்களை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டார் 3.0 மென்பொருளின் முக்கிய அம்சங்கள்:

  1. வார இறுதி நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும், பொதுமக்கள் விரும்பும் நேரத்தில் பத்திரப் பதிவு செய்ய முடியும்.
  2. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை.
  3. அனைத்து செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாகி, பத்திரங்கள் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும்.
  4. சொத்துக்கான வில்லங்க சான்றிதழையும் ஆன்லைனில் பெற முடியும்.
  5. சான்றிடப்பட்ட பத்திரப் பிரதிகள் மூன்று நாட்களுக்குள் வழங்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ‘ஸ்டார் 2.0’ மென்பொருள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது, ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய மென்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

Related News

Latest News