சமீப காலங்களில் பலர் வசதியான வாழ்க்கை முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக, அரை மணி நேரம் கூட வெயிலில் இருப்பதற்கு பலர் விருப்பம் காட்டுவதில்லை. இதனால் உடலில் வைட்டமின் டி அளவு குறைகிறது.
வைட்டமின் டி குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகும். இது நமது உடலுக்கு அவசியமான வைட்டமின்களில் ஒன்றாகும். சூரிய ஒளியிலிருந்து கிடைப்பதால் இதனை “சூரிய ஒளி வைட்டமின்” என்றும் அழைக்கிறார்கள். எப்போதும் சோர்வாக உணர்வு, அடிக்கடி எலும்பு மற்றும் தசை வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, அடிக்கடி சளி மற்றும் பிற தொற்றுகள், முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

நாள் முழுவதும் ஏசி அறைகளில் அதிக நேரம் செலவிடுபவர்கள் மற்றும் வீட்டுக்குள் மட்டுமே இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயது அதிகரிக்கும்போது, உடலில் இயற்கையாக வைட்டமின் டி உருவாக்கும் திறன் குறைகிறது. அதேபோல், அதிக மெலனின் கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு வைட்டமின் டி உறிஞ்சப்படுவது மெதுவாக இருக்கும்.
காளான், பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் இந்த குறைபாட்டை ஓரளவு சமாளிக்கலாம். இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு உள்ளது என்பதற்காக மருத்துவர் ஆலோசனை இன்றி திடீரென மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக அளவில் வைட்டமின் டி மருந்துகளை உட்கொள்வது சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
எனவே, மருத்துவரை அணுகிய பிறகே வைட்டமின் டி மாத்திரைகள் அல்லது திரவ வடிவிலான வைட்டமின் டி மருந்துகளை பயன்படுத்துவது சிறந்தது. வைட்டமின் டி குறைபாட்டை புறக்கணித்தால், அது நீண்ட காலத்தில் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே, வைட்டமின் டி அளவை அடிக்கடி பரிசோதிப்பதோடு, சத்தான உணவு உட்கொள்வதிலும், தினமும் குறைந்தது அரை மணி நேரம் வெயிலில் செலவிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் டி அளவு வயதைப் பொறுத்து மாறுபடும். வைட்டமின் டி குறைவாக இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இது இன்சுலின் உற்பத்தியை பாதிக்கக்கூடும்.
மறுபுறம், உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால் சிறுநீரக கற்கள், இதய சம்பந்தமான பிரச்சினைகள், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வைட்டமின் டி குறைபாடு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மருத்துவர் பரிந்துரையின் பேரில் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
