தரவுகளைத் திருடுவதற்காகவே பயங்கரமான வைரஸ் – ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு பேராபத்து

உலகம் முழுவதும் “எங்களுடையதுதான் மிகவும் பாதுகாப்பான மொபைல்” என்று மார்தட்டிக் கொள்ளும் ஆப்பிள் நிறுவனத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது ஒரு புதிய உளவு மென்பொருள். ஐபோன் பயனர்களின் தரவுகளைத் திருடுவதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘டார்க்ஸ்வேர்ட்’ (Darksword) என்ற பயங்கரமான ஸ்பைவேர் வைரஸை, கூகுள் மற்றும் லுக்அவுட் (Lookout) நிறுவனங்களின் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இது சாதாரண வைரஸ் அல்ல, கோடிக்கணக்கான ஐபோன்களைக் குறிவைத்துத் தாக்கும் திறன் கொண்டது என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி.

சவுதி அரேபியா, துருக்கி, மலேசியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் செய்தி இணையதளங்கள் மற்றும் அரசு இணையதளங்களுக்குள்ளேயே இந்த வைரஸை ஹேக்கர்கள் ஒளித்து வைத்துள்ளனர். நீங்கள் அந்த இணையதளங்களுக்குச் சென்றாலே போதும், உங்கள் ஐபோனுக்குள் இந்த வைரஸ் தானாகவே ஊடுருவிவிடும். உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், காண்டாக்ட்ஸ் மற்றும் வங்கி விவரங்களை இது திருடிவிடும். அதுமட்டுமல்லாமல், ‘கொருனா’ (Coruna) என்ற மற்றொரு வைரஸுடன் கைகோர்த்துச் செயல்படும் இந்த டார்க்ஸ்வேர்ட், உங்கள் போனில் உள்ள கிரிப்டோகரன்சி வேலட்களை மொத்தமாக காலி செய்துவிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வைரஸ் ஐபோனின் பழைய இயங்குதளமான iOS 18 வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிட்டிருந்தாலும், உலகம் முழுவதும் இன்னும் சுமார் 25 சதவீத ஐபோன் பயனர்கள் பழைய iOS 18-ஐத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்கள் தான் இப்போது ஹேக்கர்களின் நேரடி இலக்கு. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆப்பிளின் ‘ஏர்பிளே’ (AirPlay) வசதி வழியாக ஹேக்கர்கள் ஊடுருவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்போது மீண்டும் அப்படி ஒரு அச்சுறுத்தல் வந்துள்ளதால், ஐபோன் பயனர்கள் உடனடியாக தங்கள் மொபைலை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறு பாதுகாப்பு வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் மற்றும் பணத்தை குறிவைக்கும் சைபர் கிரிமினல்கள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். உங்கள் போனில் லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் இருக்கிறதா என்பதை இன்றே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Related News

Latest News