இண்டர்நெட் இல்லாத நாடு! – 2026-லும் இப்படியொரு நாடு இருக்கா?

இன்று உலகம் முழுவதும் 5G, 6G என்று வேகம் எடுத்துப் பறந்து கொண்டிருக்கும் போது, 2026-ம் ஆண்டிலும் இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாடு இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்ரியா (Eritrea) தான் அந்த நாடு.

உலகிலேயே மிகக்குறைந்த இணையப் பயன்பாடு கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று. தலைநகர் மற்றும் ஒரு சில முக்கிய நகரங்களைத் தவிர, மற்ற இடங்களில் டிஜிட்டல் இணைப்பு என்பதே கிடையாது. பெரும்பான்மையான மக்கள் இன்னும் கடிதங்கள் மற்றும் வாய்வழிச் செய்திகளைத் தான் நம்பியிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன தெரியுமா? எரித்ரியா அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் தான். அங்கு இணையம் என்பது அரசுக்குச் சொந்தமான நெட்வொர்க்குகளில் மட்டுமே கிடைக்கும். தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. அப்படியே யாராவது இன்டர்நெட் பயன்படுத்தினாலும், அவர்கள் என்ன பார்க்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள் என்று அரசாங்கம் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இதனாலேயே எரித்ரியாவை “உலகின் டிஜிட்டல் சிறைச்சாலை” என்று கூடச் சிலர் அழைக்கிறார்கள்.

அப்படியே இன்டர்நெட் கிடைத்தாலும், அதன் வேகம் ஆமை வேகத்தில் தான் இருக்கும். பிராட்பேண்ட் வசதி மிகவும் அரிது. மொபைல் டேட்டா பயன்படுத்துவது என்பது எட்டாக்கனி. அதுமட்டுமல்லாமல், இன்டர்நெட் கட்டணம் சாமானிய மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு சில இன்டர்நெட் கஃபேக்கள் இருந்தாலும், அங்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சொந்தமாக கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போன் வைத்திருப்பதே அங்கு ஒரு பெரிய விஷயம்.

இதன் விளைவு என்ன தெரியுமா? எரித்ரியா மக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் தனித்து விடப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆன்லைன் கல்வியைக் கற்க முடியவில்லை. வியாபாரிகள் உலகச் சந்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களுடன் பேசுவதற்குக் கூட அவர்கள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 21-ம் நூற்றாண்டில் டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை எரித்ரியா நமக்கு உணர்த்துகிறது.

Related News

Latest News