கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், 10க்கு 8 பேர், விஜயை ஆதரிக்கிறோம் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில், தலைசிறந்தவராக இருப்பவர் விஜய்.
தமிழக வெற்றி கழகம் வருகிற தேர்தலை சந்திக்கும் போது, மக்களால் மக்களாட்சி மலர்கின்ற நல்லாட்சியை கொடுக்கக் கூடிய தலைவர் விஜய் பணிகளை ஆற்றி வருகிறார். அனைவரும் மாற்றங்கள் வேண்டும் என்ற முறையில் பணிகளை ஆற்றி வருகிறோம்.
வெற்றி என்ற இலக்கை தமிழக மக்களால் உருவாக்குகிற காலம், நேற்றைக்கு முன்தினம் துவங்கியுள்ளது. 2026 தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிற நாளாக அமையும்.
திமுக வெற்றி பெறுவதற்காக பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதிகளை தந்தார்கள். இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் போராட்டம் வலிமை பெற்றுக் கொண்டுள்ளது.
பெரிய தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் பொங்கலுக்குள் இணைவார்கள். தமிழக வெற்றி கழக தலைவர் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி தான் தமிழக வெற்றி கழகத்தில் இணையும்.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி பேசுவது தமிழக வெற்றி கழகம் தான். அவ்வாறு இருக்கும் போது தமிழக வெற்றி கழகம் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துக்களை பரிமாறலாம். பேச்சுவார்த்தை என்பது தலைவர் விஜய் உடன் கலந்து பேசுவது தான் பேச்சு வார்த்தையாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
