தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது மனைவியுடன் காரில் ஈரோட்டில் உள்ள தனது உறவினர் இல்ல துக்க நிகழ்விற்காக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே சென்ற போது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக கார் ஓரமாக நிறுத்தப்பட்டு பாஸ்கரனும் அவரது மனைவியையும் கீழே இறங்கியுள்ளனர். அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதும் திடீரென கார் மளமளவென தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து எலும்பு கூடாக மாறியது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து காரியாபட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.