விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்தில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த ஹரிவிஷ்ணு என்ற 17 வயது சிறுவன், இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சா போதைப்பொருளையும், பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஹரிவிஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர், 17 வயதான அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
