புதுச்சேரி, வில்லியனூர், தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (41). கணவரை பிரிந்து வாழும் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் கொம்பாக்கம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் ஐயப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தமிழ்ச்செல்வியை காணவில்லை என அவரது சகோதரர் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தமிழ்செல்வியிடம் பர்னிச்சர் கடைக்காரர் ஐயப்பன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்ததில், தமிழ்செல்வியை கொலை செய்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
ஐயப்பனுடன் நெருங்கி பழகிய தமிழ்ச்செல்வி கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.1.5 லட்சத்தை அய்யப்பனிடம் தமிழ்செல்வி வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. பணத்தகராறு தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தமிழ்செல்வியை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பிறகு அந்த உடலை சாக்கு மூட்டையில் திணித்து, குடுவையாற்றின் வாய்க்காலில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஐயப்பனை போலீசார் நேற்று கைது செய்தனர். பிறகு தமிழ்ச்செல்வியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ஐயப்பனுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரையும் கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியுள்ளார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீனில் வந்து தற்போது தமிழ்செல்வியுடன் பழகி அவரையும் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
