மிஸ்டர் ஆசியா பட்டத்துக்கான போட்டிக்கு 71 வயது முதியவர்
தகுதிபெற்று இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகியுள்ளார்.
உடலை பிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆவலில்
இளைஞர்கள் ஜிம்முக்குச் செல்வது வழக்கம். சிலர் ஆணழகன்
பட்டத்தைப் பெறவேண்டும் என்கிற நோக்கில் உடற்பயிற்சிக்
கூடத்துக்குச் செல்வர்.
ஆனால், 71 வயதுக்காரருக்கும் ஆணழகன் பட்டம்பெற வேண்டும்
என்கிற ஆவல் கொண்டுள்ளார்.
அண்மையில் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மிஸ்டர்
ஆசியாவுக்கான போட்டியில் மதுராந்தகத்தைச் சேர்ந்த 71 வயது
முதியவரான மாஸ்டர் ரத்தினம் வெற்றிபெற்றுள்ளார். இதன்மூலம்
ஜுலை மாதம் 15 ஆம் தேதி மாலத்தீவிலும், டிசம்பர் 5 ஆம் தேதி
தாய்லாந்திலும் நடைபெற உள்ள மிஸ்டர் ஆசியா பட்டத்துக்கான
போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளார்.
மிஸ்டர் காஞ்சி, மிஸ்டர் தமிழ்நாடு, மிஸ்டர் சௌத் இந்தியா மற்றும்
மிஸ்டர் இந்தியா பட்டங்களைப் பெற்றுள்ள மாஸ்டர் ரத்தினம் செங்கல்பட்டு
மாவட்டம், மதுராந்தகம் நகரில் நவீன உடற்பயிற்சிக்கூடம் நடத்திவருகிறார்.
சாதிக்க வயது தடையில்லை என்று பொதுவாகச் சொல்வார்கள். அது கல்வி,
தொழில் போன்ற விஷயங்களைப் பொருத்தவரை எளிதில் சாத்தியமாகிவிடும்.
ஆனால், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வுறும் காலத்தில் இளைஞரைப்போல்
உற்சாகமாகவும் ஊக்கத்தோடும் உடல், மன உறுதியோடும் வலம் வருகிறார் மாஸ்டர் ரத்தினம்.