இஸ்ரேல் அரசியலில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் பெரும் புயலைக் கிளப்பி வரும் பெஞ்சமின் நெதன்யாகுவின் சட்டப் போராட்டம், இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க அல்லது ஒரு முடிவுக்கு வர, நெதன்யாகுவிற்கு ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்குவது குறித்த ஆலோசனைகளை இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் முறைப்படி தொடங்கியுள்ளார். இந்த விவகாரம் இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே ஒரு மிகப்பெரிய வெடிகுண்டாகப் பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ஹெர்சாக், நெதன்யாகுவின் வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை அழைத்து முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கிறார். இது மன்னிப்பு வழங்குவதற்கான இறுதி முடிவு அல்ல என்றாலும், இந்த நகர்வு இஸ்ரேலிய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. முக்கியமாக மூன்று வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ளன. முதலாவது வழக்கில், பெரும் தொழிலதிபர்களிடமிருந்து விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டாவது வழக்கில், ஊடக நிறுவனங்களுடன் இணைந்து தனக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிடச் செய்ததாகவும், மூன்றாவது ‘பெசெக்-வாலா’ விவகாரத்தில், பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசு விதிமுறைகளை மாற்றியமைத்ததாகவும் அவர் மீது வழக்குகள் உள்ளன.
நெதன்யாகு இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்து வருவதுடன், இது தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்தச் சந்திப்பை ஜனாதிபதி ஹெர்சாக் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அணுகுகிறார். சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த வழக்குகள் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதிப்பதாகக் கருதி, ஒரு சுமூகமான முடிவை எட்ட இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த சட்டப்போராட்டம், இஸ்ரேல் நாட்டு மக்களின் கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. ஒரு பிரதமர் பதவியில் இருக்கும்போதே குற்றச்சாட்டுகளைச் சந்திப்பது அந்த நாட்டின் ஜனநாயகத்திற்கே ஒரு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.தற்போது ஜனாதிபதி மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது, நெதன்யாகுவின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கப்போகிறதா அல்லது இந்தச் சட்டப் போராட்டம் மேலும் சில காலம் நீடிக்கப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விசாரணை பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியின் இந்தத் தலையீடு எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும்? இந்த ஆறு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழப்போகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
