நேபாளத்தைச் சேர்ந்த முகமது இம்தியாஸ் என்பவருக்கு 5 வயது மகள் உள்ளார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூர் நாசர் என்ற ரூபி (வயது 35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் முகமது இம்தியாஸ், தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே கிழக்கேமுறி பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 5 வயது சிறுமி உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள். இதைக் கவனித்த அங்கன்வாடி பணியாளர் சிறுமியிடம் காரணம் கேட்டபோது, படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறி வளர்ப்பு தாய் தனது உடலில் சூடு வைத்ததாக சிறுமி தெரிவித்தாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி பணியாளர், உடனடியாக இதுகுறித்து வாளையார் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜீவ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறி ரூபி தொடர்ந்து சிறுமிக்கு சூடு வைத்து கொடூரமாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூபியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முகமது இம்தியாசிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
