தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கட்சி நிர்வாகிகள் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய முதலமைச்சர் விஜய், வெற்றி கிடைத்துவிட்டது என்பதற்காக யாரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவோ, ஆட்டம் போடவோ நினைக்கக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
இந்தச் சூழலில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளதால், நிர்வாகிகள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிப் பணியாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியில் பதவி கிடைத்துள்ளது என்பதற்காக விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்றும், முதலமைச்சர் விஜய் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சி விதிகளை மீறுவது, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற புகார்கள் உறுதியானால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் கட்சிப் பதவி பறிக்கப்படுவதுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என தலைமை எச்சரித்துள்ளது. இதனால் தவெக நிர்வாகிகள் மத்தியில் இந்த அறிவுறுத்தல்கள் கவனம் பெற்றுள்ளன.
