தமிழக துணை சபாநாயகரும், துறையூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தவெகவைச் சேர்ந்த ரவிசங்கர், அடிப்படை வசதி குறித்துப் புகார் அளிக்கச் சென்ற நபரைத் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாதது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரவிசங்கரின் வீட்டிற்குச் சென்று தனது குறையைத் தெரிவிக்க முயன்றபோது, அவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அதில், தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சட்டமன்ற உறுப்பினரே, புகார் தெரிவிக்க வந்த பொதுமக்களைத் தாக்குவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தொகுதி மக்களை எல்லைக் காப்பாளராக இருந்து காப்போம் எனப் பேசிய முதல்வர் விஜய், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கார்த்திக் வெளியிட்ட வீடியோவில், தனது பகுதியில் சுமார் 90 நாட்களாகத் தண்ணீர் வரவில்லை என்றும், பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரவிசங்கரை நேரில் சந்தித்து அடிப்படை வசதி குறித்துக் கேட்டபோது அவமதிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், முதல்வர் விஜய் உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டு உறுதியானால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
