6 ஆண்டுகளில் இல்லாத அதிரடி வீழ்ச்சி.. தங்கத்தை வாங்க மறுக்கும் மக்கள்..

தங்கத்தின் மீதான தீராத மோகத்திற்குப் பெயர் போன இந்தியாவில், நடப்பு 2026-ஆம் ஆண்டில் தங்கத்திற்கான ஒட்டுமொத்த தேவை கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானைத் தொடும் அளவிற்கு எகிறியுள்ள வரலாறு காணாத தங்க விலை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, கொரோனா பேரிடர் காலமான 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டு நாட்டின் தங்கத் தேவை வெறும் 650 மெட்ரிக் டன்களாகச் சுருங்கிவிடும் அபாயம் உருவாகியுள்ளது.

உலகளவில் தங்கத்தை வாங்குவதில் சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், கடந்த செப்டம்பர் காலாண்டில் மட்டும் தங்கத்தின் மீதான தேவை முந்தைய ஆண்டை விட சுமார் 29 சதவீதம் வரை அதிரடியாகச் சரிந்துள்ளது.

குறிப்பாக ஆபரண நகைகள் வாங்குவது 20 சதவீதமும், முதலீட்டு ரீதியிலான தங்க வர்த்தகம் 40 சதவீதமும் படுவீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த தங்க விற்பனையில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பை வழங்கி வரும் கிராமப்புறப் பொருளாதாரம், இந்த ஆண்டு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதுதான் இதற்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகளின் வருமானம் கணிசமாகக் குறைந்து, தங்கம் வாங்கும் திறனை அவர்கள் அடியோடு இழந்துள்ளனர்.

இதனுடன் சர்வதேச அளவில் நிலவும் ஈரான் போர் பதற்றங்களால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் மத்திய அரசு உயர்த்திய இறக்குமதி வரிகள் ஆகியவை சாமானிய மக்களின் சேமிப்பைக் கரைத்து, தங்கம் வாங்குவதை எட்டாக்கனியாக மாற்றியுள்ளன.

தற்போது வந்துள்ள தீபாவளிப் பண்டிகையும் வரவிருக்கும் திருமண சீசனும் நகை விற்பனையில் சற்றே புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விண்ணை முட்டும் தங்கத்தின் அதீத விலை மக்களின் வாங்கும் ஆர்வத்தைக் கட்டிப்போட்டுள்ளது.

பாரம்பரியமிக்க தங்க நகைக் கடைகளே வெறிச்சோடிப் போகும் அளவிற்கு நடுத்தர வர்க்கத்தை யோசிக்க வைத்துள்ள இந்தத் திடீர் போக்கு, இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தில் நிலவும் எதார்த்த நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Related News

Latest News