வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் குறித்த செய்திகள் தற்போது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒடிசா மாநில அரசு ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
புயல் எங்கே கரையை கடக்கும், எந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும் என்பது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் சிலர் இஷ்டத்திற்கு வதந்திகளைப் பரப்பி வருவதை அரசு மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இப்படி மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் போலியான செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா அரசு பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இப்படிப்பட்ட தவறான வானிலை கணிப்புகளால், விவசாயிகள் பயந்துபோய் தங்கள் பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்து பெரும் நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், பொதுமக்கள் பீதியடைந்து அத்தியாவசியப் பொருட்களை முண்டியடித்து வாங்குவதால், சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி கிடுகிடுவென உயர்கிறது.
அரசின் மீட்புப் பணிகளுக்கும் இது மிகப்பெரிய தடையாக மாறுகிறது. இதைத் தடுக்கும் விதமாக, இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, பிரிவு ஐம்பத்தி நான்கு மற்றும் ஐம்பத்தி ஒன்றின் கீழ், வதந்தி பரப்புபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அர சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அறிவியல் பூர்வமற்ற தகவல்களை இணையத்தில் வெளியிடுவோர் மீது தயவு தாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யூடியூப், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் புயல் குறித்த போலியான வரைபடங்களையோ, மிகைப்படுத்தப்பட்ட ஆபத்துகளையோ பகிர்வதை பொதுமக்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். சைபர் கிரைம் போலீசாரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகளும் இணையத்தை முழு நேரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் வதந்திகளை நம்பாமல், அரசும் வானிலை மையமும் சொல்லும் அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே பொதுமக்கள் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
