சென்னையில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களைக் கொண்டிருந்த 27 வயதான பிரபல நிதி ஆலோசகர் மற்றும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் (Social Media Influencer) வி.ஹரிஷ், தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ (Finance With Harish) என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நிதி மேலாண்மை, முதலீடுகள் மற்றும் பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்த ஹரிஷ், சென்னை முட்டுக்காடு (Muttukadu) பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சோக முடிவுக்குப் பின்னால் கடுமையான சைபர் புல்லிங் (Cyberbullying), தொடர்ச்சியான அவதூறுகள் மற்றும் சோஷியல் மீடியா கணக்குகள் திட்டமிட்டு முடக்கப்பட்டதே காரணம் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் ஹரிஷின் முதன்மை சோஷியல் மீடியா பக்கங்கள் அனைத்தும் ‘மாஸ் ரிப்போர்ட்’ (Mass Report) செய்யப்பட்டு மெட்டா (Meta) நிறுவனத்தால் முடக்கப்பட்டன.
இதனால் மனமுடைந்த ஹரிஷ், புதிதாக உருவாக்கிய மாற்றுக் கணக்குகளும் மீண்டும் மீண்டும் ரிப்போர்ட் செய்யப்பட்டு முடக்கப்பட்டதால், கடுமையான நிதி நெருக்கடிக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளானார்.
இதற்கிடையே, ஜேசன் சாமுவேல் (Jason Samuel) என்ற மற்றொரு இன்ஃப்ளூயன்ஸர், கடந்த அக்டோபர் 18 அன்று வெளியிட்ட வீடியோவில் ஹரிஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் முதலீட்டு ஆலோசகர் உரிமம் (SEBI Registered Investment Adviser – RIA) இல்லாமல் ஹரிஷ் சட்டவிரோதமாக நிதி ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும், ஆம்பி (AMFI – Association of Mutual Funds in India) உரிமத்தைத் தவறாகச் சித்தரித்து மக்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால், உயிரிழப்பதற்கு முன் ஹரிஷ் பதிவு செய்த உருக்கமான வீடியோ வாக்குமூலம் ஒன்று தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், “தனது இந்த முடிவுக்கு ஜேசன் சாமுவேல் தான் முழு காரணம் என்றும், தான் இனிமேல் எந்தப் புதிய கணக்குகளையும் தொடங்க முடியாதவாறு முடக்குவேன் என்று அவர் தொடர்ச்சியாக மிரட்டியதாகவும்” ஹரிஷ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஹரிஷின் தந்தை விநாயகம் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகனைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜேசன் சாமுவேல், “தான் ஹரிஷை சைபர் புல்லிங் செய்யவில்லை என்றும், செபி உரிமம் பெறாமல் செயல்பட்ட சட்டவிரோதச் செயலை மட்டுமே சுட்டிக்காட்டியதாகவும், சரியான உரிமத்துடன் மீண்டும் வீடியோ போடச் சொன்னதாகவும்” விளக்கம் அளித்துள்ளார். ஹரிஷ் இப்படி ஒரு விபரீத முடிவை எடுப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கானத்தூர் காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய மரணம் (Unnatural Death) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருதரப்பு வாக்குமூலங்களையும், ஹரிஷின் மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களையும் (Digital Evidence) தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பல வருடக் கடின உழைப்பில் உருவான சோஷியல் மீடியா பக்கங்கள் ஒரே நாளில் முடக்கப்பட்டதும், இணையத்தில் எழுந்த கடுமையான அவதூறுகளுமே ஒரு இளம் யூடியூபரின் உயிரைப் பறித்துள்ளதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், இணையதளப் பாதுகாப்பு மற்றும் மனநலம் குறித்த மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
