இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) சுமார் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களின் ரகசியத் தரவுகளைத் தாங்கள் ஹேக் செய்து கைப்பற்றியுள்ளதாக ‘சிரியசிம்’ (Siriusim) என்ற அடையாளம் தெரியாத ஹேக்கர் குழு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
‘சைபர் பல்ஸ் 56’ (CyberPulse56) என்ற சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஹேக்கர் குழுவிடம் எஸ்பிஐ வங்கியின் 3.8 லட்சம் சிஎஸ்வி (CSV) தரவுப் பதிவுகளும், 2,722 பிடிஎஃப் (PDF) ரகசிய ஆவணங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், முகவரிகள், கடன் விண்ணப்பங்கள் (Loan Applications), வங்கிக் கணக்கு தொடங்கும் ஆவணங்கள் மற்றும் பிற முக்கியமான சான்றிதழ்கள் அடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தத் தரவு கசிவு உண்மையா மற்றும் எஸ்பிஐ வங்கியின் சர்வரில் இருந்துதான் நேரடியாகத் திருடப்பட்டதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது சுதந்திரமாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை ஹேக்கர் குழு கசியவிட்டுள்ளதாகக் கூறும் இந்தத் தரவுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்களின் அடையாளத் திருட்டு (Identity Theft), நிதி மோசடிகள், போலியான கடன் விண்ணப்பங்கள் மற்றும் ஃபிஷிங் (Phishing) தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சைபர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்திய நிதித்துறையைக் குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியும் (RBI) வணிக வங்கிகளுக்கான சைபர் பாதுகாப்பு விதிகளைக் கடுமையானதாக்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி தரப்பில் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படாத நிலையில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியியல் கணக்குகள் மற்றும் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
