தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு முதலே மழைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இன்று அதிகாலையில் சில இடங்களில் லேசான மழை பெய்ததுடன், வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழையைத் தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், எல் நினோ தாக்கமும் இருப்பதால் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை உட்படத் தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். திடீர் மழைப்பொழிவுகளுடன் இடைவெளிகளும், அவ்வப்போது கனமழையும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மழை எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் பெய்யாது என்பதால், வெளியே செல்லும்போது குடை அல்லது மழைக்கோட்டை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகத்திற்குப் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்துள்ளார்.
