இன்று முதல் 3 நாட்களுக்கு மழை: வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள்ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன் தாக்கத்தால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 28-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

29-ம் தேதியும் பல மாவட்டங்களில் இதேபோன்ற வானிலை நிலவக்கூடும். 30-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.

இதற்கிடையே, செப்டம்பர் 27 முதல் 30 வரை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

Related News

Latest News