இதுவரை ஏ.ஐ-யிடம் கேள்விகள் கேட்டு தகவல்களை மட்டுமே நாம் பெற்று வந்தோம். ஆனால், மனித ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னால் ஒரு மாபெரும் மருத்துவக் கண்டுபிடிப்பை, ஏ.ஐ தொழில்நுட்பம் தன்னிச்சையாக நிகழ்த்தியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ‘கிளாட் ஏ.ஐ’ (Claude AI), மருத்துவத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய புதிய மரபணு அமைப்பைக் கண்டுபிடித்துள்ளது.
‘கிரிஸ்பர்’ எனப்படும் நவீன மரபணு மாற்றத் தொழில்நுட்பத்திற்கு இணையான இந்த புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் உலகையே தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களுக்குள் இருக்கும், இதுவரை யாரும் கண்டறியாத ஒரு புதிய உயிரியல் அமைப்பை கிளாட் ஏ.ஐ கண்டுபிடித்துள்ளது. இதற்கு ‘ஆர்ட்’ (ART) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால், கணினியில் உள்ள வார்த்தைகளை நாம் எப்படி கட், காப்பி, பேஸ்ட் செய்கிறோமோ, அதேபோல மனிதர்களின் டி.என்.ஏ-வில் உள்ள குறைகளை நீக்கி, வேண்டிய மாற்றங்களைச் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் இது.
எதிர்காலத்தில் பல்வேறு மரபணு சார்ந்த நோய்களைக் குணப்படுத்த இது ஒரு மிகப்பெரிய கருவியாகப் பயன்படலாம். ஒரு மனித ஆராய்ச்சியாளர் பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பகுப்பாய்வை, இந்த ஏ.ஐ வெறும் இருபத்தி ஒரு மணி நேரத்தில் செய்து முடித்துள்ளது.
சுமார் தொள்ளாயிரத்து ஐம்பது ஏ.ஐ ஏஜெண்டுகள், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மரபணு தரவுகளைத் தீவிரமாக அலசி ஆராய்ந்து இந்த அமைப்பைக் கண்டறிந்துள்ளன.
உலகிலேயே இதுவரை எந்தவொரு மனிதரும் இதைக் கண்டுபிடிக்கவில்லை என்பதையும், பல முந்தைய அறிவியல் கட்டுரைகளைத் தானே வாசித்து உறுதி செய்த பிறகே, இந்த ஏ.ஐ தனது முடிவை ஆய்வாளர்களிடம் சமர்ப்பித்துள்ளது.
என்றாலும், ஏ.ஐ தொழில்நுட்பம் முழுமையாக ஒரு ஆய்வை செய்துவிட முடியாது. அது ஒரு புதிய திசையை மட்டுமே காட்டியுள்ளது. இதன் உண்மைத்தன்மையையும், செயல்திறனையும் மனித விஞ்ஞானிகள் தற்போது உண்மையான ஆய்வகங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ‘கிரிஸ்பர்’ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டபோதும், அது எதற்குப் பயன்படும் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இன்று அது மருத்துவ உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, ஏ.ஐ கண்டுபிடித்துள்ள இந்த புதிய அமைப்பும், எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
