இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, தேசியக் கொடுப்பனவு நிறுவனமான என்பிசிஐ, தங்களது அதிகாரப்பூர்வமான ‘பீம் ஆப்’-பில் ஒரு அதிரடியான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
‘MyUPI’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஏஐ அசிஸ்டெண்ட் மூலம், இனி நீங்கள் பல மெனுக்களுக்குள் சென்று தேட வேண்டிய அவசியமே இல்லை.
சாதாரணமாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டாலே, இந்த தொழில்நுட்பம் தானாகவே அந்த வேலையை மிகச் சுலபமாக முடித்துக் கொடுக்கும்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் என நீங்கள் எந்தெந்த ஆப்புகளில் உங்களது வங்கிக் கணக்கை இணைத்திருந்தாலும், அந்த அனைத்து யூபிஐ பணப் பரிவர்த்தனைகளையும் இனி இந்த ஒரே இடத்திலேயே உங்களால் முழுமையாகப் பார்க்க முடியும்.
மேலும், நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பும்போதோ அல்லது கியூஆர் கோடை ஸ்கேன் செய்யும்போதோ, பணம் பெறுபவர் உண்மையான நபர்தானா என்பதை மிகத் துல்லியமாக உறுதிப்படுத்தும் ‘pay safe’ என்ற புதிய வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நீங்கள் தவறுதலாக வேறு யாருக்காவது பணத்தை அனுப்பிவிட்டாலோ அல்லது உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு அது சேர வேண்டியவருக்குச் சேராமல் இருந்தாலோ, அதற்கான புகாரை நேரடியாகவே இதில் பதிவு செய்து, அந்தப் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
இதில் உள்ள மிக முக்கியமான ஒரு சிறப்பு அம்சம் ‘சேப்டி ஸ்விட்ச்’. உங்களது போன் தொலைந்துவிட்டாலோ அல்லது உங்களது கணக்கிலிருந்து உங்களை அறியாமலேயே திடீரெனப் பணம் கழிக்கப்பட்டாலோ, இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நொடியில் உங்களது வங்கிக் கணக்கின் யூபிஐ சேவையை முழுமையாக முடக்க முடியும். இதன் மூலம் உங்களது பணம் திருடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தலாம்.
இதுமட்டுமின்றி, உங்களது முதன்மை மொபைல் எண்ணிற்கு யூபிஐ மூலம் பணம் வருவதைத் துண்டித்துவிட்டு, உங்களுக்கான பிரத்தியேக யூபிஐ ஐடி-க்கு மட்டும் பணம் வரும்படியும் இதில் நீங்கள் தற்காலிகமாக மாற்றிக் கொள்ளலாம்.
முற்றிலும் பாதுகாப்பான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வந்துள்ள இந்த புதிய அப்டேட், இந்திய மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
