தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்படி, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில் புதிய திட்டம் அக்டோபர் 2, 2026 முதல் செயல்படுத்தப்படவுள்ளது. போக்குவரத்துக் கட்டணம் காரணமாக மகளிர் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர். புதிய திட்டத்தின் மூலம் Express, LSS, Deluxe, Mofussil Ordinary மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட Ghat Ordinary பேருந்துகளிலும் இலவசப் பயணம் விரிவுபடுத்தப்படுகிறது.
மொத்தம் 12,692 பேருந்துகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள். மாணவிகள் கல்லூரிகளுக்கும், மகளிர் பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். ETM இணைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 27 அன்று சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
