மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ‘சரத்குமார்’! CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு?

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன நிலையில், அரசு மீதான முதல் ஊழல் குற்றச்சாட்டு இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த முறைகேட்டின் மையப்புள்ளியாக அமைந்திருப்பது, முதல்வர் விஜய்யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி நிர்வாகத் துறையும், அந்தத் துறைக்குள் வரும் தாம்பரம் மாநகராட்சியும்தான்.

சுமார் 46 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சிலை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் கோரப்படுவதற்கு முன்பே, அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவும் நடத்தப்பட்டதாக ஊழலுக்கு எதிரான ‘அறப்போர் இயக்கம்’ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான சரத்குமாரின் பெயர் அடிபடுவது, இந்தச் சர்ச்சையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி தாம்பரத்தில் அசோகா பில்லர் சிலை மற்றும் சிட்லபாக்கம் ரவுண்டானாவில் உள்ள சிலைகள் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதற்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ஆம் தேதிதான் கோரப்பட்டதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஊழலுக்கான முன்னோட்டம் என்று குற்றம் சாட்டியுள்ள அந்த அமைப்பு, முதல்வர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளித்துள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, தமிழக அரசு உடனடியாக தாம்பரம் மாநகராட்சி ஆணையரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து, சில அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆனால், இந்தச் சர்ச்சையின் மற்றொரு பக்கத்தில் இருப்பது அமைச்சர் சரத்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், அவர் வெள்ளை நிறப் பொருள் ஒன்றைக் கையாண்டது ‘பவுடர் சர்ச்சை’யாக வெடித்தது.

அது போதைப்பொருள் அல்ல, தனது குழந்தைக்கான மாத்திரையைத் தான் பொடி செய்தேன் என்று அவர் விளக்கம் அளித்த போதிலும், அந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

இந்த நிலையில், தற்போது அவரது தொகுதியிலேயே நடந்த இந்த டெண்டர் முறைகேட்டிலும் அவரது பெயர் அடிபடுவது, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலைகளைத் திறந்து வைத்ததே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு அளித்துள்ள விளக்கம் மேலும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஊழல் அல்ல, ஒரு ‘செயல்முறை குறைபாடு’ (Procedural Lapse) மட்டுமே என்று அரசு கூறியுள்ளது.

ஒரு தனியார் நிறுவனம் தனது சிஎஸ்ஆர் (CSR) நிதியில் இந்தச் சிலைகளைச் செய்து தருவதாகக் கடிதம் அளித்ததாகவும், அதன்பிறகே பணிகள் நடந்ததாகவும், இதற்காக அரசு நிதி எதுவும் செலவிடப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பணி முடிந்த பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது தவறுதான் என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தவெக அரசுக்கு இது ஒரு அக்னிப் பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் புகாரில் வெறும் அதிகாரிகள் மட்டும் பலிகடா ஆக்கப்படுவார்களா அல்லது அமைச்சர் மீதும் விசாரணை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருபுறம் திமுக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் “தவறு செய்தோர் மீது நடவடிக்கை பாயும்” என்று தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர் சரத்குமாரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? இந்த ஊழல் புகாரை முதல்வர் விஜய் எப்படி கையாளப் போகிறார்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News