செல்போனால் வந்த ‘பேராபத்து’! 10 ஆண்டுகளில் இல்லாத சம்பவம்! தப்பிக்குமா அடுத்த தலைமுறை?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது இளைய தலைமுறையினரின் அறிவுத்திறன் ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலக நாடுகளின் கல்வித் தரத்தை ஆய்வு செய்யும் பிசா (PISA 2025) அமைப்பின் சமீபத்திய முடிவுகள், 15 வயது மாணவர்களிடையே வாசிப்புத் திறன் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பாதாளத்திற்குச் சென்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் மாணவர்களின் வாசிப்பு மதிப்பெண்கள் சராசரியாக 28 புள்ளிகள் சரிந்துள்ளன.

கணிதம் மற்றும் அறிவியலை விட வாசிப்புத் துறையில்தான் இந்த வீழ்ச்சி மிகக் கோரமாக உள்ளது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்தச் சரிவிற்கு கொரோனா பெருந்தொற்று மட்டுமே காரணம் என்று நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் 2015-ஆம் ஆண்டிலிருந்தே இந்த வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

அதிகப்படியான ‘ஸ்கிரீன் டைம்’ (Screen Time), அதாவது செல்போன் மற்றும் கணினித் திரைகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவது, புத்தகங்களை வாசிப்பதில் உள்ள ஆர்வத்தைக் குறைத்துவிட்டது.

இதனால் மாணவர்கள் ஒரு நீண்ட கட்டுரையைப் படித்துப் புரிந்துகொள்ளும் திறனை இழந்து வருகின்றனர். ஒரு விஷயத்தை ஆழமாகச் சிந்திப்பதற்கும், அதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கும் தேவையான பொறுமை இன்றைய மாணவர்களிடம் இல்லை என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மிக முக்கியமாக, ‘அவசர வாசகர்கள்’ (அதாவது,Hasty Readers) என்ற ஒரு புதிய வகை மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். தகவல்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கத்தால், 2018 முதல் 2025-க்குள் நிதானமாக வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம், எதையும் புரியாமல் அவசர அவசரமாக வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வெறும் படிப்புச் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல; ஆழ்ந்து சிந்திக்கும் திறன் (Critical Thinking) மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்யும் திறனை அடுத்த தலைமுறை மெல்ல மெல்ல இழந்து வருகிறது என்பதற்கான அபாய எச்சரிக்கை.

தகவல்கள் இன்று விரல் நுனியில் கிடைத்தாலும், அந்தத் தகவலைச் சரியாகப் பகுத்தறியும் அறிவுத்திறன் மழுங்கி வருவது ஒரு மிகப்பெரிய சமூகச் சிக்கலாக மாறப்போகிறது.

வெறும் செல்போன் திரைகளில் மட்டும் அறிவைத் தேடும் இளைய சமூகம், புத்தகங்களின் வழி கிடைக்கும் ஆழமான ஞானத்தைத் தவறவிட்டு நிற்கிறது.

டிஜிட்டல் உலகம் மனிதர்களைச் சோம்பேறிகளாக மாற்றுவது ஒருபுறம் இருக்க, அடிப்படை அறிவுத்திறனையே கேள்விக்குறியாக்குவது ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்திற்கே விடப்பட்ட சவாலாகும். தப்பிப்பதற்கான நேரம் மிகக்குறைவாகவே இருக்கிறது!

Related News

Latest News