தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் லண்டனுக்கு அமைகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், செப்டம்பர் 11ஆம் தேதி லண்டன் சென்றடைகிறார். செப்டம்பர் 16ஆம் தேதி அவர் தமிழ்நாடு திரும்புகிறார்.
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பது, தொழில்முனைவோர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திப்பது ஆகியவை இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது. லண்டனில் தங்கியிருக்கும் நாட்களில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல்கள், அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் முதலமைச்சர் எடுத்துரைக்க உள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ரூ.67,482 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் சில முக்கிய பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் நவீன வசதிகளுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் லண்டனில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் வசதிகள் மற்றும் பந்தய சுற்றுவட்டப் பாதைகளை அவர் பார்வையிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் விஜய் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் முதன்மைச் செயலாளர்கள் மற்றும் வழிகாட்டி தமிழ்நாடு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் பயணம் மேற்கொள்கின்றனர். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் சென்னை வருகை காரணமாக பயணத்தில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், திட்டமிட்டபடி பயணம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
