10 வருடத்தில் மனித இனம் ‘அழிந்துவிடும்’? அலறவிட்ட Anthropic AI விஞ்ஞானி!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எனப்படும் AI, மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்பட்ட காலம் முடிந்து, இப்போது அதுவே மனித இனத்தின் அழிவிற்கு வித்திடுமோ என்ற அச்சம் உலகையே உலுக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, உலகின் முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூத்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள், தொழில்நுட்ப உலகையே நிலைகுலைக்க வைத்துள்ளது.

அந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விலகிய ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சன், “AI-ஐ உருவாக்கி வரும் மனிதர்கள், இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் அது நம் அனைவரையும் கொன்றுவிடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ஏதோ விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் வாசகம் அல்ல, ஒரு பயங்கரமான உண்மை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை அந்த நிறுவனத்தின் ‘அலைன்மென்ட் சயின்ஸ்’ பிரிவின் தலைவரான இவான் ஹுபிங்கர் வழிமொழிந்துள்ளார். அவரது தனிப்பட்ட கணிப்புப்படி, அடுத்த பத்தே ஆண்டுகளுக்குள் இந்தத் தொழில்நுட்பத்தால் ஒட்டுமொத்த மனித இனமும் அழிந்து போவதற்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, ஒரு தற்கொலைச் சுழற்சியில் ஓடிக் கொண்டிருப்பதாகவும், மனித உயிர்களை வைத்து அவர்கள் சூதாடுவதாகவும் இந்த விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது இருக்கும் AI மாடல்கள் ஆபத்தானவை அல்ல என்றாலும், தன்னைத்தானே திருத்தி எழுதிக் கொண்டு, அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (Superintelligence) என்பது நாம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருவாகி வருவதே இந்த அச்சத்திற்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தன்னையே மேம்படுத்திக் கொள்ளும் இந்த அதிபுத்திசாலி இயந்திரங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்பச் செயல்பட வைப்பது என்பது குறித்து இதுவரை எந்தவொரு தெளிவான திட்டமும் யாரிடமும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெட் லியு, AI-களுக்கான அவசரகால ‘கில் சுவிட்ச்’ (Kill Switch) சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், பல கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டுள்ள தொழிலதிபர்களும் இந்தத் தகவலால் கடும் கவலையடைந்துள்ளனர்.

மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி, உண்மையிலேயே நமது இறுதி அத்தியாயத்திற்கு அடிகோலுகிறதா என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த உலகின் முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறி!

Related News

Latest News