மகளிர் உரிமைத் தொகை குறித்து நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய விளக்கம்!!

வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி சென்று வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக நிதியமைச்சர் நெ.மரிய வில்சனும் பாதயாத்திரை மேற்கொண்டார்.

சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்று வருவதாகவும், இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் யாத்திரை என்பதால் சிறப்பானதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

வழியெங்கும் மக்கள் அளிக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், ஆட்சியின் முதல் 100 நாட்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசிய அமைச்சர், நிதி நிலைமை சீரடைந்ததும், முதலமைச்சரின் ஆலோசனையுடன் தகுதியான பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

வருவாயை பெருக்க வணிகவரி, பதிவுத்துறை மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடுகள் குறித்து ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கூட்டணி குறித்த யூகங்களை மக்கள் நம்பவில்லை என்றும், நாட்டின் எதிர்கால தலைமையை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும் மரிய வில்சன் கூறினார்.

Related News

Latest News